Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

அஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது..!!?

சென்னை: ஒரு அஜித் ரசிகனின் காதல், ஆக்ஷ்ன், காமெடி, கண்ணீர் எபிசோட் தான் பில்லா பாண்டி திரைப்படம்.

அணைத்’தல’ப்பட்டி அஜித் ரசிகர் மன்றத் தலைவர் பில்லா பாண்டி (ஆர்.கே.சுரேஷ்), அஜித்தின் புகைப்படத்தை பூஜையறையில் வைத்து கும்பிடும் அளவுக்கு தீவிர பக்தர். கட்டிட தொழில் செய்யும் பில்லா பாண்டிக்கு அவரது மாமா மாரிமுத்துவின் மகள் சாந்தினி மீது காதல். சாந்தினிக்கும் பில்லா பாண்டி தான் உயிர். ஆனால் இவர்களது காதல் மாரிமுத்துக்கு பிடிக்கவில்லை. இந்நிலையில் வெளியூருக்கு கட்டிட வேலைக்கு செல்லும் பில்லா பாண்டி மீது இந்துஜாவுக்கு ஒருதலை காதல். இந்த விஷயம் இந்துஜாவின் தந்தைக்கு தெரியவர, பாண்டியை அடித்து விரட்டுகிறார். இந்த விஷயம் ஊர் முழுவதும் பரவ, பில்லா பாண்டியின் காதலுக்கு பிரச்சினை ஏற்படுகிறது. கடைசியில் பில்லா பாண்டி யாருடன் ஜோடி சேர்கிறார் என்பதை சென்டிமெண்ட் கலந்து உணர்வுபூர்வமாக சொல்கிறது படம்.

Billa Pandi movie review

வில்லனாக அறிமுகமாகி குணச்சித்திர நடிகராக மாறிய ஆர்.கே.சுரேஷ், இந்த படம் மூலம் ஹீரோவாக புரோமோஷன் பெற்றிருக்கிறார். காதல், சென்டிமெண்ட் காட்சிகளில் உணர்வுப்பூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். அஜித் ரசிகராக தல வசனங்களை அவர் பேசும்போது தியேட்டரில் கைத்தட்டல்கள் பறக்கின்றன. ஆக்ஷன் காட்சிகளில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். லேசாக ராஜ்கிரண் சாயல் தெரிகிறது.

சாந்தினி, இந்துஜா என படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருந்தாலும், இருவருக்குமே பெர்பாமன்ஸ் செய்ய நிறைய வாய்ப்புகள் படத்தில் இருக்கின்றன. நிறைவாகவே செய்திருக்கிறார்கள். நகரத்து கதாபாத்திரத்திலேயே பார்த்த சாந்தினிக்கு முதல் முறையாக கிராமத்து முறைப்பெண் வேடம். சிறப்பாக நடித்திருப்பது மட்டுமின்றி, அழகாக ஜொலிக்கிறார். இந்துஜா எளிமையாக வந்து, பெர்பாமன்ஸ் செய்து கவர்கிறார்.

Billa Pandi movie review

தம்பி ராமையாவின் காமெடி லேசாக கிச்சுகிச்சு மூட்டுகின்றன. அமுதவாணனை இன்னும் கூட பயன்படுத்தி இருக்கலாம். கெஸ்ட் ரோலில் வரும் சூரியும், விதார்த்தும் சர்ப்ரைஸ் மொமண்ட் தருகிறார்கள். தயாரிப்பாளர் கே.சி.பிரபாத்துக்கு வில்லன் புரோமோஷன். இவர்களை தவிர, சௌந்தரராஜன், மாரிமுத்து, சங்கிலி முருகன் உள்ளிட்டோர் படத்தில் ‘நடித்திருக்கிறார்கள்’.

காமெடி நடிகராக அறியப்பட்ட ராஜ் சேதுபதி இப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். கதைக்காக பெரிதாக மெனக்கெடாமல், எம்எம்எஸ் மூர்த்தியின் கதையை எடுத்துக்கொண்டு, அதை வியாபார ரீதியாக மெருகேற்றியிருக்கிறார்.

அஜித்தின் பெயரை மட்டும் வைத்துக்கொண்டு அவரது ரசிகர்களை கவர முயன்றிருக்கிறார் இயக்குனர். தல பெருமைகளை பேசுவது முதலில் ரசிக்க வைத்தாலும், பின்னர் ஓவர்டோசாக மாறி திகட்டுகிறது. இதனால் அஜித்தை வாழும் தெய்வமாக்கி, வியாபாரம் செய்யும் யுத்தி பலிக்காமல் போகிறது.

Billa Pandi movie review

முதல் பாதி படம் எதை நோக்கி செல்கிறது என்பதே புரியவில்லை. ஆனால் இரண்டாம் பாதியில் சென்டிமெண்ட் மசாலாவை தூவி பி மற்றும் சி சென்டர் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார்கள். இதனால் ஒரு முழு படமாக திருப்தி தருகிறான் இந்த பில்லா பாண்டி.

படத்திற்கு மிக பெரிய பலமாக இருப்பது பாடல்கள் தான். எங்கக்குல தங்கம் பாடல் அஜித் ரசிகர்கள் எவர்கிரீன் டியூனாக வந்துள்ளது. வெள்ளந்தி வீரா பாட்டு சூப்பர் மெலடி. இசையமைப்பாளர் இளையவனுக்கு பெரிய எதிர்காலம் காத்திருக்கிறது.

Billa Pandi movie review

படத்தில் நடித்துள்ள அனைவரையும் அழகாக காட்டியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஜீவன். இரண்டாம் பாதியின் நீளத்தை இன்னும் கொஞ்சம் குறைத்திருந்தால் ராஜா முகமதுவின் படத்தொகுப்பு நிறைய பேசப்பட்டிருக்கும். சக்தி சரவணன் ஸ்டன்ட் காட்சிகளில் மிரட்டியிருக்கிறார்.

மொத்தத்தில் அஜித் ரசிகர்களுக்கு ‘தல தீபாவளி’ விருந்தாக வந்திருக்கிறது பில்லா பாண்டி.

Check Also

யாரை சமாதானம் செய்வது.. வைகோ – காங்கிரஸ் மோதலால் சிக்கலில் ஸ்டாலின்.. என்ன நடக்கிறது கூட்டணியில்?

சென்னை: மதிமுக மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இடையில் நிலவி வரும் பிரச்சனை காரணமாக தற்போது திமுக தலைவர் ஸ்டாலின் சிக்கலுக்கு …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.