Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.
Beautiful Asian healthy girl with orange fruit over her eyes on gray background

கோடைக்காலத்தில் கண்களைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்… மருத்துவர் தரும் டிப்ஸ்!

கோடைக்காலத்தில் வழக்கத்துக்கு மாறாக வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும். குறிப்பாக, அக்னி நட்சத்திரத்தின்போது வெப்பத்தின் தாக்கம் கூடுதலாக இருக்கும். அப்போது உடல் சார்ந்த பிரச்னைகள் பலவற்றைச் சந்திக்க நேரிடும். குறிப்பாக, அதிக வெயில் காரணமாக, கண்கள் பல வகைகளில் பாதிக்கப்படும். எனவே, மற்ற காலங்களைவிட கோடைக்காலத்தில்தான் கண்மீதான பராமரிப்பில் கூடுதல் கவனம் தேவை. 

கோடைக்காலத்தில் கண்களில் ஏற்படும் பாதிப்புகள் என்னென்ன… அவற்றைச் சரிசெய்வது எப்படி? என்று விளக்குகிறார் கண் மருத்துவர் நவீன். 

“கோடைக்காலத்தில் கண்களில் ஏற்படும் நோய்களில் முக்கியமானது கண்கள் உலர்ந்துபோதல் (Dry Eyes). இதனால் கருவிழி பாதிப்புக்குள்ளாக வாய்ப்பு உள்ளது. கண்களின் கருவிழிக்கு மேலே ஒரு மெல்லிய அடுக்கு உண்டு. இது `லிப்பிட் லேயர்’ (Lipid layer) என்பார்கள். இதை `கொழுப்பு லேயர்’ என்றும் அழைப்பார்கள். நடுவில் திரவ அடுக்கு எனும் `லிக்யூட் லேயர்’ (Liquid layer), அதன் அடியில் உள்ளது `மியூக்கஸ் லேயர்’ (Mucus layer). இந்த மூன்றும் சரியான விகிதத்தில் இருந்தால்தான் கண்ணீர் சரியாக இயங்கும். அதேபோல கண் ஈரப்பதத்துடன் இருந்தால்தான் பார்வைத் திறன் நன்றாக இருக்கும்.

கோடைக்காலத்தில் ஏற்படும் அதிக வெப்பத்தால் கருவிழியின் நடுவிலுள்ள லிக்யூட் லேயர் ஆவியாகி கண் உலர்ந்துபோய்விடும். கண்கள் உலர்ந்துபோனால் கருவிழி பாதிப்படையும். இதுபோன்ற நேரங்களில் சிகிச்சை அவசியமாகும். கண்கள் உலர்ந்து போவதைச் சரிசெய்ய வெவ்வேறுவகையான சொட்டு மருந்துகள் இருக்கின்றன. தீவிர பாதிப்புள்ள நோயாளிகளுக்கு ஜெல் வகை மருந்துகள் தரப்படும். இது நீண்ட நேரம் ஒட்டிக்கொண்டு, கண்களைப் பாதுகாக்கும். மிக மோசமான சூழலில் அறுவை சிகிச்சையும் தேவைப்படலாம். கண்கள் உலர்ந்துபோவதைத் தடுக்க போதுமான அளவு தண்ணீர் அருந்துவது அவசியமானது.

கண் ஒவ்வாமை

கண் ஒவ்வாமை உள்ளவர்களுக்குக் கண்களில் அரிப்பு அதிகமாக இருக்கும். மேலும் இரு கண்களும் சிவந்து காணப்படுவதுடன் நீர் அதிகமாக வடியும்; இமைகளில் வீக்கமும் காணப்படும். அதனால் கண்கள் சிறுத்துப்போவது போன்ற உணர்வு தோன்றும். கோடையில் சில தாவரங்கள், மரங்கள் பூத்துக் குலுங்கும். அவற்றின் பூக்களிலுள்ள மகரந்தங்கள் (Pollen Grains) காற்றில் மிதக்கும். அவை கண்ணில்படும்போது ஒவ்வாமையை ஏற்படுத்தும். அடுத்ததாக, கோடையில் வெப்பநிலை அதிகரிக்கும்போது ஒவ்வாமையும் அதிகரிக்கும்.

கண்ணில் ஒவ்வாமை உள்ளவர்கள் குளிர்ந்த நீரில் ஒத்தடம் தருவது நல்லது. இதே ஒவ்வாமை, குளிர்காலத்தில் வந்தால் பிரச்னை இருக்காது. ஆனால், கோடைக்காலத்தில் ஒவ்வாமை உள்ளவர்கள் கண்களைத் திறக்க முடியாத அளவுக்குப் பாதிப்பு இருக்கும். 

இந்நிலையில் சொட்டு மருந்துகள் மற்றும் மாத்திரைகள் மூலம் ஒவ்வாமையிலிருந்து விடுபடலாம். கண்களில் ஒவ்வாமை பாதிப்பு உள்ளவர்கள் அடிக்கடி கண்களைக் கசக்காமல் இருக்க வேண்டும். அதேபோல `ஐஸ் ஜெல் மாஸ்க்’கை (Ice jel mask) குளிர்சாதனப்பெட்டியில் வைத்துக் குளிரூட்டி, கண்களின் மீது வைக்கலாம். இது, கண் ஒவ்வாமைக்குத் தீர்வாக அமையும். கண் வலி (மெட்ராஸ் ஐ)

பாக்டீரியாவால் வரும் பிரச்னையே கண் வலி. இதைச் சரிசெய்ய, கண்களில் ஆன்டிபயாடிக் டிராப்ஸ் விடலாம். பொதுவாகக் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொண்டாலே கண்களில் பாக்டீரியா தொற்று ஏற்படாமல் தற்காத்துக்கொள்ள முடியும். ஆல்கஹால் சொல்யூஷனை பயன்படுத்திக் கைகளைச் சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். 

கண் வலி காற்று மூலமாகப் பரவும் நோய் அல்ல. ஒருவருக்குக் கண் வலி வரும்போது, அவர் தன்னுடைய கண்ணைத் தொட்டுவிட்டு, வேறு ஏதேனும் ஒரு பொருளைத் தொடும்போது அந்தப் பொருளில் பாக்டீரியாக்கள் ஒட்டிக்கொள்ளும். அந்தப் பொருளை இன்னொருவர் தொட்டு, தன்னுடைய கண்களில் கையை வைப்பதன் மூலம் பரவும். இப்படித்தான், கண் வலி ஒருவரிடமிருந்து மற்றவருக்குப் பரவுகிறது.  
கண்வலி உள்ளவர்கள் பயன்படுத்தும் படுக்கை விரிப்புகள், தலையணை உறை, துண்டு, கைக்குட்டை என அனைத்தையும் தனியாகத் துவைத்துப் பயன்படுத்த வேண்டும். மற்றவர்கள் அதைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். கண் வலி உள்ளவர்கள், தலைக்குக் குளிக்கலாம். அடிக்கடி கண்களைச் சுத்தமான நீரால் கழுவுவது அவசியமானது. அதேபோல, போதுமான அளவு நீர் அருந்துவதும் முக்கியமானது. ஏனென்றால், கண்ணிலுள்ள  நீர்ப் படலம் (டியர் ஃபிலிம் -Tear film) நன்றாக இயங்க இது அவசியம். மேலும், ஆழ்ந்த உறக்கம் தேவை. கணினி, செல்போன் போன்றவற்றை அதிகமாகப் பயன்படுத்துவதை கண் வலி உள்ளவர்கள் தவிர்ப்பது நல்லது. 

கண்களில் வரும் சூட்டு கட்டி 

கோடைக்காலத்தில் கண்களில் நீர் வறட்சி ஏற்படும்போது, சிலர் அடிக்கடிக் கண்களைக் கசக்குவார்கள். கண்களை, இப்படி அடிக்கடி கசக்குவதால், கண் இமைகளில் உள்ள சிறு துவாரங்களில் அடைப்பு உண்டாகும். இதனால்,தொற்று ஏற்பட்டு வீக்கம் ஏற்படும். இதைத்தான் `சூட்டுக் கட்டி’ என்கிறார்கள். இதைத் தவிர்க்கத் தேவையில்லாமல் கண்களில் கை வைப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோன்று, போதுமான அளவு உறங்குவதும் அவசியம். இவையெல்லாம் வரும்முன் கடைப்பிடிக்க வேண்டியவை. 

சூட்டுக் கட்டி வந்துவிட்டால், ஆன்டிபயாடிக் ஐ டிராப்ஸ் மற்றும் ஆன்டிபயாடிக் மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ள வேண்டும். சூட்டுக் கட்டிக்கு வெந்நீர் ஒத்தடம் கொடுக்க வேண்டும். அப்படிச் செய்யும்போது, விரைவாகக் கட்டி பழுத்து, சீழ் வெளியேறும். பிறகு, கட்டி சுருங்கி, ஓரிரு வாரங்களில் சரியாகிவிடும்.  

கண்களைப் பாதுகாக்க அவசியம் செய்ய வேண்டியவை:

* கோடைக்காலத்தில் புற ஊதாக்கதிர்களின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்பதால் தரமான கூலிங்கிளாஸ் அணிய வேண்டும்.

* ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.

* கண்களைச் சுகாதாரமான நீரில் கழுவ வேண்டும். மினரல் அல்லது ஆரோ வாட்டர் பயன்படுத்தலாம்” என்கிறார். Check Also

பேப்பர் எங்கடா.. ஷூ காலால் மிதித்த காக்கி சட்டைகள்.. அடிக்காதீங்க சார்.. வலிக்குது.. ஷாக் வீடியோ

லக்னோ: இளைஞர் ஒருவரை 2 போலீசார்கள் எகிறி எகிறி காலால் எட்டி உதைக்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. இந்தியாவில் …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.