பெங்களூரு: தமக்கு சல்யூட் அடித்த ஒரு பள்ளி சிறுவனுக்கு பெங்களூரு காவல் ஆணையர் பதில் சல்யூட் அடிக்கும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைராகி வருவதோடு, பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரு மாநகரின் காவல் ஆணையர் சுனில்குமார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இவர் இந்த பதவியில் இருக்கிறார். பெங்களூரு மாநகர காவல் துறையின் உயர்ந்த பதவியில் இருக்கும் சுனில்குமார், ஒரு மருத்துவமனையில் இருந்து வெளியே வரும்போது, குறுக்கே வந்த பள்ளி மாணவன் அவருக்கு சல்யூட் செய்தான். சற்றும் யோசிக்காத சுனில்குமார் அந்த சிறுவனுக்கு பதில் சல்யூட் செய்தார்.
இதனை தூரத்தில் இருந்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்தக் காட்சியினை பெங்களூரு காவல்துறை தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டது. இதைப்பார்த்தவர்கள் காவல்ஆணையரை புகழ்ந்து தள்ளி வருவதுடன், எல்லோரும் இதேபோன்று நடந்துக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளனர். இதுவரை 1500க்கும் மேற்பட்டவர்கள் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளனர். 80,000க்கும் அதிகமானவர்கள் வீடியோவை பார்த்துள்ளனர். இதனால் இந்த வீடியோ இப்போது சமூகவலைதளங்களில் டிரென்டிங்காகி வருகிறது.
மரியாதை என்பது நாம் மற்றவருக்கு கொடுத்து வாங்குவது என்பதை நிரூபிக்கும் வகையில் காவல் ஆணையரின் செயல்பாடு இருப்பதாகவும், காவல்துறையினர் எவ்வாறு நடந்துக்கொள்ள வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்களோ அவ்வாறு காவல் ஆணையர் நடந்துக்கொண்டிருக்கிறார் என பலரும் பலவிதமாத சுனில்குமாரை பாராட்டி வருகின்றனர். இவரைப் போலவே மற்ற அதிகாரிகளும் நடந்துக்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் சமூகவலைதங்களில் உலா வருகிறது. பலரை பலவிதமாக விமர்சித்து தள்ளும் நெட்டிசன்கள், நல்ல விஷயம் என்றால் அதை புகழ்ந்துதள்ளவும் தயங்க மாட்டார் என்பதை நிரூபித்துள்ளது இந்த சம்பவம்.