Breaking News
தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கம்.

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களித்தால்தான் தமிழகத்தையும், இந்தியாவையும் காப்பாற்ற முடியும். தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி. பேசினார்

தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் முழுவதும் ரத்து செய்யப்படும் என கனிமொழி எம்.பி. பேசினார்.திருச்செந்தூரை அடுத்த வீரபாண்டியன்பட்டினத்தில் தி.மு.க. சார்பில், ஊராட்சி சபை கூட்டம் நடந்தது. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.மாநில மகளிர் அணி செயலாளர் கனிமொழி எம்.பி. பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அவர் பேசும்போது கூறியதாவது:- தமிழகத்தில் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தி இருந்தால், மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர்ந்து இருக்கும். ஆனால் தோல்வி பயத்தால் அ.தி.மு.க. அரசு உள்ளாட்சி தேர்தலை நடத்தாமல், காலம் கடத்துகிறது. மேலும் தி.மு.க. எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் தங்களது சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து திட்டங்களை நிறைவேற்றினாலும், அ.தி.மு.க. அரசு முட்டுக்கட்டை போடுகிறது. அதனையும் தாண்டி அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. சிறப்பாக அனைத்து திட்டங்களையும் நிறைவேற்றி உள்ளார்.வருகிற பாராளுமன்ற தேர்தலுடன், 21 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலும் வர உள்ளது. எனவே மத்தியிலும், மாநிலத்திலும் நிச்சயம் ஆட்சி மாற்றம் ஏற்படும். தமிழகத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நல்லாட்சி மலர்ந்தவுடன் பொதுமக்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும். வரும் நிதி ஆண்டில் எனது பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இங்குள்ள பள்ளிக்கூடத்தில் புதிய கட்டிடம் கட்டப்படும். இங்கு கடலில் தூண்டில் வளைவு பாலத்தை சீரமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.இந்தியாவின் மீன்வளத்துறைக்கு என்று தனி அமைச்சகம் வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தி பேசி உள்ளேன். இதனை தி.மு.க. தேர்தல் அறிக்கையிலும் குறிப்பிட்டுள்ளோம். மத்திய பா.ஜ.க. அரசு பெரிய தொழில் அதிபர்களுக்கு கடன்களை வாரி வழங்கி விட்டு, அதனை திருப்பி வசூலிக்காமல், அவர்களை வெளிநாடுகளுக்கு பாதுகாப்பாக அனுப்பி வைக்கிறது. ஆனால் போதிய வேலைவாய்ப்பு இல்லாததால், கல்விக்கடன்களை திருப்பி செலுத்த முடியாத மாணவர்களை அச்சுறுத்துகின்றனர். தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் மாணவர்களின் கல்விக்கடன் முழுவதும் ரத்து செய்யப்படும்.மக்களை பாதிக்கின்ற எந்த தொழிலையும் அனுமதிக்க மாட்டோம். நமது இயற்கை வளங்களை கொள்ளையடிக்காத, சுற்றுச்சூழலுக்கு உகந்த தொழில்களை உருவாக்குவோம். இப்பகுதியில் ஆன்மிக சுற்றுலாவுக்கு நல்ல வாய்ப்பு உள்ளது. சரக்கு, சேவை வரியை (ஜி.எஸ்.டி.) அமல்படுத்தியதால் சிறுகுறு தொழில்கள் முடங்கி, பல லட்சம் தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். அவர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவோம். பெண்களின் முன்னேற்றத்துக்காக கலைஞர் கருணாநிதி மகளிர் சுயஉதவிக்குழுக்களை தொடங்கினார். ஆனால் அதனை மூடும் நிலைக்கு அ.தி.மு.க. அரசு கொண்டு வந்து விட்டது. மத்திய பா.ஜ.க. அரசுக்கு பினாமியாக அ.தி.மு.க. உள்ளது. பா.ஜ.க. அரசு மதம், சாதி, இனம், ஆண்-பெண் பாகுபாடு என்று மக்களை பிரித்து, கலவரங்களை உருவாக்குகிறது. எனவே பா.ஜ.க. அரசை அகற்ற வேண்டும். தமிழக மக்களின் குரலுக்கு செவிசாய்க்கும் மத்திய அரசு அமைய வேண்டும். எனவே வரும் பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு வாக்களித்தால்தான் தமிழகத்தையும், இந்தியாவையும் காப்பாற்ற முடியும்.இவ்வாறு கனிமொழி எம்.பி. பேசினார்.

Check Also

ரஜினியை விமர்சித்த சீமான்.. கொந்தளித்த ரசிகர்கள்.. திரும்பிக் கொடுத்த நாம் தமிழர் தொண்டர்கள்!

சென்னை: நாம் தமிழர் கட்சியினருக்கும் நடிகர் ரஜினிகாந்தின் ரசிகர்களுக்கும் இடையில் தற்போது சமூக வலைத்தளங்களில் மிக மோசமாக சண்டை நடந்து …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.